Sunday, July 19, 2009

2009 மார்கழி மாதம் மீண்டும் வருகிறேன் ....

இதுவரை என் நெருங்கிய நண்பன் ஆறுமுகத்தின் கிராமத்தில் உள்ள அவனது வீட்டிற்க்கு 1989 ஆம் ஆண்டு சென்று வந்ததை உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் .
20 வருடங்கள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் அவனது கிராமத்திற்கு வந்திருக்கிறேன் , இனி அதை தங்களிடம் பகிர்ந்து கொள்ள போகிறேன் .
அந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் என்னை வியப்பில் ஆழ்த்தியது ,
இவை அனைத்தும் நல்லதா தீயதா என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை ,
தங்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும் , புரிந்ததை எனக்கும் தெரிவித்தால் என்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன் .

Thursday, July 16, 2009

காலம் கரையத் தொடங்கியது ,சூரியன் தன் வர்ண வித்தைகளை வானத்திரையில் சிறிது சிறிதாக குறைத்துக்கொண்டு வந்து வீட்டிற்க்கு சென்று விட்டான் ,நாங்களும் வீட்டிற்க்கு வந்து விட்டோம், கறந்த பசும் பாலில் போட்ட காபியில் பறந்த வாசனை மூக்கு வழியாக மூளைக்குள் சென்றது .மூளை சுறுசுறுப்பானது ,மாலை மணி ஆறை தாண்டியிருந்தது .ஆறுவின் அக்காள் நிலவொளி வந்திருந்தார்கள் ,எனை பார்த்து டேய் ' நீ தமிழா ' என்றார்கள் .'இல்லை நான் தெலுங்கு' என்றேன் .டேய் இன்னும் அந்த வாய் கொழுப்பு அப்படியே இருக்குதுடா ( எனது அம்மா அப்பாவை விசாரித்தார்கள் - நன்றாக இருக்கிறார்கள் என்றேன் ) அப்பொழுது இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று அக்காவின் காலை ஓடிவந்து கட்டிக்கொண்டது .' அக்கா இது யாருக்கா ' என்று அந்த குழந்தையை தூக்கினேன்,அது விசும்ப ஆரம்பித்தது , ' உன் பெயர் என்ன என்றேன் . அழவே ஆரம்பித்து விட்டது , அக்காவாங்கிக்கொண்டு .அவ பெயர் மின்மினி என்றார்கள் , என்ன அருமையான பெயர் என்று நான் சொல்ல ,ஆறுமுகமோ ' மின்மினிபூச்சின்னு பெயர் வைத்திருக்கலாம் ,கையையும் காலையும் பாரு சின்னசின்னதா பூச்சி மாதிரியே ' அக்காவுக்கு கோபம் வந்தது
'அவ கலரப்பாருடா ' என்றார் . ஆறுவும் விடுவதாக இல்லை . 'ஆமா கரிச்சட்டி மாதிரியே இருக்கு' என்றவுடன் ,அக்காவுக்கு கோபம் அதிகமாகி , அம்மாவிடம் ' அவனை வாயை மூட சொல்லுங்கம்மா ,இல்லேன்னா அவ அப்பாகிட்ட சொல்லிடுவேன்னு ' என்று சொல்ல . ஆமா மச்சான் என்ன பெரிய சூரரா , இரண்டு சிங்கத்தை கட்டி ஏர் உளுதரா ,அப்படியே பயந்துருவோம் ' என்று சொல்லிமுடிப்பதற்குள் ,ஆறுவின் மச்சானே உள்ளே வந்தார் . ' வாங்க மச்சான்
உக்காருங்க என்று நாற்காலியை எடுத்து போட்டான் . ( எதுவுமே நடக்காதது போல் ) அக்கா விடவில்லை ' இதபாருங்க நம்ம பொண்ண கரிச்சட்டியாம் ,பூச்சியாம், அதுபரவாயில்லை ,மச்சான் என்ன இரண்டு சிங்கத்த கட்டி உளுதரா .என்ன பண்ணிடுவாருன்னு கேட்கிறாங்க , நீங்க என்னென்னு கேளுங்க ' என்று போட்டுக்கொடுக்க ,மச்சானோ லேசாக சிரித்தவாறே ' என்ன மாப்பிளே ' ஒங்க அக்காவையே கெட்டியிருகேன் ,சிங்கத்தயா கெட்டமுடியாது ' என்றார் ,எல்லோரும் சிரிக்க , வீடே கலகலப்பானது . ( இந்தமாதிரி சந்தோஷம் எங்கு இருக்கிறதோ அங்கு நோய் இருக்காது ) ' சரி ஆறுமுகம் நான் கிளம்புகிறேன் ,பேருந்துக்கு நேரமாகிறது ' என்றேன் . எட்டு மணிக்குதான் பேருந்து அதற்க்குள்
சாப்பிடலாம் வா ' என்றான் .அக்கா .மச்சான் . குழந்தை, நான் எல்லோரும் சாப்பிட அமர்ந்தோம் , சுடச்சுட சோறும் பசும் பாலும் ,வீட்டில் சுட்ட முறுக்கும் , வாழைப்பழமும் மீண்டும் வயிற்றை நிரப்ப ,இன்று நடந்த எல்லாம் என் மனதை நிரப்ப , கையை மட்டும் கழுவிக்கொண்டேன் . அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டேன் .பேருந்து ஏற்ற ஆறு வந்தான் ,பேருந்தின் முன் முகப்பு விளக்கு தெரிய ஆரம்பித்ததும் ,என் கையை பிடித்துக்கொண்டான் ,'டேய் அடிக்கடி வாடா ' என்றான் .அருகில் வந்த பேருந்தின் முகப்பு வெளிச்சம் ,அவன் கண்களில் பெருக்கெடுத்து நின்ற நீரில் பட்டு எதிரொளித்தது . சரி என்ற வார்த்தைக்குமேல் என்னாலும் பேசமுடியவில்லை .நட்பு தொண்டையை அடைத்துக்கொண்டது .பேருந்து அருகில் வந்தது . என் உடல் ஏறிக்கொண்டது . மனதோ சிரமப்பட்டு உள்ளே திணிதுக்கொண்டது . இருவரும் கையசைதுக்கொண்டோம் , மனதை அசைக்க முடியவில்லை . -தொடரும்