ஐந்து நிமிட நடைபயண தூரத்தில் அவனுடைய வயல், பத்து ஏக்கருக்குமேல் இருக்கும்,வரப்புகள் கட்டம் கட்டமாக வெட்டப்பட்டு தண்ணீர் பாயச்சபட்டிருந்தது .மூளைக்குள் சதுரங்ககட்டம் ஞாபகம் வந்தது .ஒரு பாத்தியில் மட்டும் இளம் பச்சை நிறத்தில் நாற்று வளர்க்கப்பட்டு அதன் தலையினை காற்று வருடிக்கொண்டிருந்ததால் பார்ப்பதற்கு பச்சை பட்டுக்கம்பளத்தில் காற்று உள் புகுந்து அலையை ஏற்படுத்தி வெளி வருவதுபோல் இருந்தது .சற்று தூரத்தில் இரண்டு ஆண்களும் சில பெண்களும் நின்று கொண்டிருந்தனர் ஆறுமுகத்தை பார்த்ததும் "வாங்க அய்யா உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம் "என்று கூறி தாம்பாளத்தில் வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்களை ஆறுமுகத்திடம் கொடுத்தனர் ."என்னடா இன்று புதிய வேலை ஆரம்பிக்கின்றார்களா" "ஆமாடா நல்லநாளில்தான் நீ வந்திருக்கிறாய் "என்று கூறி தாம்பாளத்தை கையில் எடுத்து தீபம் ஏற்றி சூரியனுக்கும் ,வயல் வரப்பில் நடந்து சென்று நாற்றுக்கும் காண்பித்தான்,கூடவே ஒரு பெண் சிறிய பித்தளை மணியை அடித்துக்கொண்டு வந்தாள் .ஓரிடத்தில் தாம்பாளத்தை வைத்துவிட்டு தீபத்தை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான், பின் தட்டில் இருந்த திருநீற்றை நெற்றியில் இட்டுகொண்டான் ,நானும் இட்டுக்கொண்டேன் ,தட்டில் சில புதிய பத்து ரூபாய்களை வைத்தான்,அவற்றை எடுத்துக்கொண்ட மாடசாமியின் ( வேலையாள் ) முகத்தில் எத்தனை புன்முறுவல் ( அந்த சிரிப்பில் நான் இறைவனை கண்டேன் ) அவனே அதை வைத்துக்கொள்ளவில்லை ,உடன் வேலை செய்பவர்களை அழைத்து "இந்தா அய்யா கொடுத்தாரு "என்று பிரித்து கொடுத்தான் .அவர்கள் முகத்திலும் இறைவன் பரவினான்."அய்யா நீங்கள் முதல் நாற்றை எடுத்து கொடுங்கள் நாங்கள் வேலையை ஆரம்பிக்கிறோம் " என்று மாடசாமி கூற ,ஆறுமுகம் வேட்டியை மடித்து கட்டி நிலத்தில் இறங்கி ஒரு நாற்றை எடுத்து அதனை முத்தமிட்டு மாடசாமியிடம் கொடுக்க மாடசாமியும் மற்றவர்களும் நட ஆரம்பித்தார்கள் .எனக்கும் இறங்கி நட வேண்டும் என ஆசை ,ஆனால் என்
உடை ( குழாய்தான் ) என் ஆசையை தடுத்தது.அங்கு அது வேட்டியை போல் உதவவில்லை . ஆறுமுகம் நிலத்தில் இருந்து வரப்பிற்கு வந்தான் ."என்னடா ஆறு நாற்றுக்கு முத்தம் கொடுத்தால் நன்றாக வளருமா " என்றேன் .சிரித்துக்கொண்டே சொன்னான் " தமிழ்,எங்க அய்யா ( அப்பாவை இப்படித்தான் அழைப்பான் ) ஒரு தாய் தன் பிறந்த குழந்தையை எப்படி தன்னுடன் அனைத்து முத்தமிடுவளோ அது போல் உனது சொந்த மண்ணில் விளையப்போகும் இந்த நாற்றை முத்தமிடு அது செழித்து வளர்ந்து உன்னையும் ,மண்ணையும் வாழவைக்கும் என்று சொல்வார்கள் ,அவருக்குப்பின் என்னையும் இந்த மண்ணையும் வாழ்வாங்கு வாழ வைத்தது அவரின் இந்த அறிவுரைதான் .நான் இந்த நாற்றை என் குழந்தையாகதான் பார்க்கிறேன் , ஒரு குழந்தைக்கு பசி எடுத்தால் தாய் எப்படி பசிஆற்றுகிறாளோ அது போல் உரம் போட வேண்டிய நேரத்தில் உரம் போட்டும் ,நீர் ஊற்ற வேண்டிய நேரத்தில் சரியாக நீர் ஊற்றியும் நான் வளர்க்கிறேன் ,அது என்னையும் என் குடும்பத்தையும் வளர்க்கிறது"என்றான்.அவனுக்கு இந்த உழவுத்தொழில் மேல் இருந்த பாசம் ,என் கண் வயலில் நீரை தேக்கியது .( தொடரும் )
Tuesday, April 28, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment